பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய 240 புதிய அரசு பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      தமிழகம்
cm edapadi inaug govt buses 2020 01 29

சென்னை  : அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 83 கோடியே 83 லட்சம்  ரூபாய்  மதிப்பீட்டிலான  240 புதிய பேருந்துகளையும்,   திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு10 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 35 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும்,  திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும் என மொத்தம் ரூபாய்  83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பணிமனை வாகனங்கள்

2018-19ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், அரசு தானியங்கி பணிமனை இல்லாத மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு துறை ஊர்திகள் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனை தவிர்த்திடும் பொருட்டு தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அம்மா அரசு நடமாடும் பணிமனை முன்னோட்ட அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

முன்பதிவு செய்ய செயலி

அவசர வேலை காரணமாக உடனடியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

பணி நியமன ஆணை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி  பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களில், 36 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநனராகவும் 188 வாரிசுதாரர்களுக்கு நடத்துனராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணிநியமனம் செய்யப்பட்ட 1,828 சேம ஓட்டுநர்கள் மற்றும் 537 சேம நடத்துனர்களில், தகுதி பெற்ற 1,112 ஓட்டுநர்கள் மற்றும் 162 நடத்துனர்களுக்கு தினக்கூலி ஓட்டுநர் மற்றும் தினக்கூலி நடத்துனர்களாக பதவி மாற்றம் செய்வதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  7 சேம ஓட்டுநர்கள் மற்றும் சேம நடத்துனர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன்,  மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  கணேசன், மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் செந்தில்வேலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து