முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சிகிச்சையுமின்றி கொரோனாவில் இருந்து உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து உடனடியாக குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு தாய் மூலமாக கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்படுத்தினர். ஆனால் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை. வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தானகவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளது. இது குறித்து வுகான் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் சென்ங் கூறுகையில், குழந்தை சியோசியோவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவவில்லை. ஆகையால் நாங்கள் குழந்தைக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் எதையும் வழங்கவில்லை. குழந்தையின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது. அதற்கான சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனா புதிய வைரஸ் என்பதால் அது எப்படி பிறந்த குழந்தைகளுக்கு பரவுகிறது என்பது பற்றி தெரியவில்லை. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும் போது நாம் கவனமாக செயல்பட வேண்டும் என்றார். குழந்தை சியோசியோவை வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்ததையடுத்து கடந்த 21- ம் தேதியே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக வுகான் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து