சென்னை சேப்பாக்கத்தில் வரும் 2 - ம் தேதி பயிற்சியை தொடங்கும் மகேந்திர சிங் டோனி

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      விளையாட்டு
Dhoni Practice 2020 02 26

சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2- ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.

13 - வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 29 - ந்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கு தயாராவதற்கு வசதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி வருகிற 2 - ந்தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்.

அந்த சமயத்தில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் யாரெல்லாம் மற்ற போட்டிகள் இன்றி ஆயத்தமாக இருக்கிறார்களோ அவர்களும் பயிற்சியில் இணைந்து ஈடுபடுவார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் நேற்று தெரிவித்தார். மார்ச் 19-ந்தேதி தொடங்கும் பயிற்சி முகாமின்போது அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து விடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய பிறகு டோனி எந்தவித சர்வதேச போட்டியிலும் ஆடவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். ஓய்வு பெறுவாரா? அல்லது தொடர்ந்து விளையாடுவாரா? என்பதில் 38 வயதான டோனி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது ஆட்டத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பொறுத்தே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முடிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். டோனி 2 வாரங்கள் பயிற்சியில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னாவும், அம்பத்தி ராயுடுவும் கடந்த 3 வாரங்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து