முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி இடமாற்றம் கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் நடந்தது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

வியாழக்கிழமை, 27 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

டெல்லி ஐகோர்ட் நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் என்பது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு பரிந்துரை அடிப்படையில் நடந்தது. இது வழக்கமான இடமாற்றம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடங்குவதற்கு முன்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா, மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர், எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் மக்களைத் தூண்டிவிடும் வகையில் வெறுப்புணர்வுடன் பேசியதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், பா.ஜ.க. தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதிகளைத் தேர்வு செய்யும், இடமாற்றம் செய்யும் சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பு, ஐகோர்ட் நீதிபதி முரளிதரை பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்துள்ளது. நீதிபதி முரளிதர் இடமாற்றத்துக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறுகையில்,

நீதிபதி முரளிதர் ஹரியாணா-பஞ்சாப் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நடைமுறை முறைப்படி நடந்துள்ளது. கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில்தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடமாற்றத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குகிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் நீதித்துறை மீதான அற்பமான மதிப்பை காட்டியுள்ளது.கடந்த 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு முரளிதரை இடமாற்றம் செய்து பரிந்துரை செய்தது அடிப்படையில்தான் இது நடந்தது. இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன் நீதிபதி முரளிதரிடம் அனுமதி கேட்டுதான் செய்தோம். இந்த தேசத்தின் மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டார்கள், ஆனாலும், தொடர்ந்து இந்தியாவின் மாண்புக்குரிய அமைப்புகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தாக்கி வருகிறது. நீண்ட விவாதங்கள் நடந்தபின், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்குக்கூட மதிப்பளிக்காமல் கேள்வி எழுப்பியவர்கள் இங்குதான் இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலாக ராகுல் காந்தி தன்னை உயர்ந்தவர்கள் என்று கருதுகிறாரா. நீதிமன்றத்தின் சுதந்திரத்தை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ளல், அவசரக்கால நேரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை மீறி செயல்படுதல் போன்ற காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அனைவரும் அறிந்ததுதான். அவர்கள் விரும்பும் வகையில் தீர்ப்புகள் வந்தால் மட்டும் மகிழ்ச்சியடைவார்கள், இல்லாவிட்டால், தீர்ப்புகள் மீது தொடர்ந்து அவர்கள் கேள்வி எழுப்புவார்கள். காங்கிரஸ் கட்சி என்பது ஒரு தனிக்குடும்பத்தினரின் சொத்தாகக் கருதப்படும்போது, கண்டனத்துக்குரிய பேச்சுகள் குறித்த பேச உரிமையில்லை. நீதித்துறை, ராணுவம், சி.ஏ.ஜி, பிரதமர், தேசத்தின் மக்கள் ஆகியோருக்கு எதிராகக் கடினமான வார்த்தைகளை அந்த குடும்பத்தினர் தொடர்ந்து பேசியவர்கள்தான். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து