Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். 

வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) 3 முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன்.

வெளிமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் 3 ஆயிரத்து 409 பேர் பணிபுரிகிறார்கள். உணவு கூடங்களில் 7 ஆயிரத்து 871 பேர் பணிபுரிகிறார்கள். பண்ணைகளில் 4 ஆயிரத்து 953 பேர் பணிபுரிகிறார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் 7 ஆயிரத்து 198 பேர் பணிபுரிகிறார்கள் என்று முதல்வர் கூறினார். 

அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் எந்த தடையும் இல்லை. வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வரவேண்டி உள்ளது. பல மாநிலங்களில் ஒவ்வொரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கூடாது என பிரதமர் கூறியிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று நோய் மிகப்பெரிய கொடிய தொற்று நோய். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எந்தெந்த நாட்டில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் விளையாட்டு தனமாக வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்கள். நோயின் தாக்கம் எப்படி என்பதை உணர வேண்டும். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உலுக்கி வரும் நோய் இது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் இந்த தடை உத்தரவை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுமையாக இருந்தோம். இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாக்கத்தான். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசின் நோக்கம் இந்த நோயை தடுப்பது தான். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.எனவே தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார். 

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடைகளுக்கு தினசரி போக வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வெளியே செல்ல தேவை இல்லை. எனவே இதனை கடைப்பிடிப்பது மக்களின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. எனவே சட்டம் தனது கடமையை செய்யும். அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. எனவே மக்கள் இதற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு அரசு விலையின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணை போன்றவைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து