மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Arjun Macval 2020 08 02

Source: provided

புதுடெல்லி : மத்திய கனரக தொழில் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் அறிவுரையின்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மக்களவைத் தொகுதியிலிருந்து அர்ஜுன் மேகவால் எம்.பி.யாகத் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

பா.ஜ.க. தரப்பில் ஏற்கெனவே உ.பி. மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால், அவருக்குக் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்தது. 

ஆனால், கடந்த வெள்ளிக் கிழமை மீண்டும் மேக்வாலுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு  வந்த நிலையில், மேக்வாலுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேக்வால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விடுத்த அறிக்கையில், நான் நலமாக இருக்கிறேன். கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, பரிசோதனை நடத்தியதில், எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அறிவுரைப்படி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து