தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேட்டி

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2020

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியதாவது:–

தேர்தல் கமிஷன் சில கருத்துக்களை கேட்டுள்ளது. அதற்கு ஏற்ப அ.தி.மு.க. சார்பில் சொல்ல வேண்டிய கருத்துகளை குறித்து ஆலோசனை கருத்து பரிமாற்றம் செய்தோம். இதுகுறித்து தலைவர்களிடம் எடுத்து சொல்வோம்.  சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம். சிறந்த முறையில் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். துணை முதல்வரும் மற்றும் அமைச்சர்களும் துணையாக இருந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்தியாவுக்கு தமிழகம் முன் மாதிரியாக உள்ளது. முதல்வர் வேட்பாளர் பற்றி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் இணைந்து பேசி முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். 

அதை தொடர்ந்து பாரதீய ஜனதா தலைமையில் தான் கூட்டணி என வி.பி.துரைசாமி கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டதற்கு, இதனை யார் சொன்னது. அந்த கட்சியின் மாநில தலைவர் சொன்னாரா? அல்லது அந்த கட்சியின் அகில இந்திய தலைவர் நட்டா சொன்னாரா? ஒரு கட்சியில் இருந்தவர், அதற்கு முன்பு ஒரு கட்சியில் இருந்தவர், ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று அவர் இப்படி சொல்லி இருக்கிறார். அவருக்கு கட்சி அதிகாரம் தந்துள்ளதா?  நேற்று(நேற்று முன்தினம்) கூட பா.ஜ.க. தலைவர் முருகன் அ.தி.மு.க.வுடன் தான் பா.ஜ.க. கூட்டணி என்று கூறியுள்ளார். அ.தி.மு.க. தலைமையில் தான் பா.ஜ.க. கூட்டணி இருக்கிறது என்று முருகன் சொல்லி இருக்கிறாரே. எனவே இந்த கேள்விக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். 

நேற்று நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி., வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து