இன்னும் 2 வருடத்திற்குள் கில்லை கேப்டனாக பார்க்கலாம்: சைமன்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      விளையாட்டு
Simon 2020 09 30

Source: provided

அபுதாபி : தினேஷ் கார்த்திக், மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் என சைமன டவுல் தெரிவித்துள்ளார்.

19 வயதிற்கான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஷுப்பமான் கில். இவரை கடந்த முறை ஐ.பி.எல். ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால் முதல் தொடரில் தொடர்ந்து அவருக்கு தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

இந்த தொடரில் அவருக்கு தொடர்ந்து முதல் இடம் கொடுப்பதாக தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்தார். மேலும், எங்களுடைய வழிநடத்தும் உறுப்பினர்களில் அவரும் ஒருவர் எனக் கூறியிருந்தார்.  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மேலும் அணி வெற்றி பெறும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

இந்நிலையில் இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை கேப்டனாக பார்க்கலாம் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சைன் டவுல் கூறுகையில்,

இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக நாம் பார்த்தோம் என்றால், நான் அதிர்ச்சி அடைய மாட்டேன். அவர் தினேஷ் கார்த்திக் மற்றும் மோர்கன் ஆகியோருடன் ஏராளமான நேரத்தை செலவிட்டு அவர்களின் கேப்டன் திறனை பெற வேண்டும். மேலும் 8 வருடங்களாக கேப்டனாக திகழ்ந்த பிரெண்டன் மெக்கல்லமிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களிடம் இருந்து ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன். 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 62 பந்தில் 70 ரன்கள் அடித்தது சிறப்பான ஸ்கோர். இந்த தொடரில் அவர் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. 143 ரன்கள் என்ற இலக்கு என வரும்போது நீங்கள் உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அவர் இன்னும் களத்தில் நின்று அவருடைய முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அவரால் முழுவதும் பேட்டிங் செய்து அணியை வெற்றி பெறச் செய்ய வைக்க முடியும். மோர்கன் சிறந்த பார்ட்னர்ஷிப். அவருடைய அனுபவம் அமைதியான சுபாவம் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து