குட்கா விவகாரம்: பேரவை செயலாளர் மனுத்தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      தமிழகம்
Gutka 2020 10 27

Source: provided

சென்னை : குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸூக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன என்று குற்றம் சாட்டி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டசபைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர்.

இந்த செயல் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டசபை உரிமை மீறல் குழுவுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. தமிழக அரசு குறுக்கு வழியில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க குட்கா விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்த நோட்டீசை அனுப்பி உள்ளதாகவும், இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேரும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசில், அடிப்படை தவறுகள் உள்ளன. இந்த நோட்டீசின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன் பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாக கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என்று தீர்ப்பளித்தனர். 

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 7-ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.  இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிமைக் குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.  இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸூக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து