செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு: கொட்டும் மழையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

புதன்கிழமை, 25 நவம்பர் 2020      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வங்கக் கடலில் உருவான, ‘நிவர்’ புயல் தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் செம்‌பரம்‌பாக்கம்‌ ஏரிக்கு ஒரு வாரத்திற்குப்‌ பின் மீண்டும் நீர்வ‌ரத்து அதிகரித்துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ளது. 

இந்நிலையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 3,000 கன அடியாக உயர்த்தப்பட்டது கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது செம்பரம்பாக்கத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கத்தில் இருந்து 5 -கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நேரில் ஆய்வு

கொட்டும் மழையில் செம்பரம்பாக்கத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். கொட்டும் மழைக்கு நடுவே செம்பரம்பாக்கம் நீர் திறப்பு குறித்து ஆய்வு செய்த அவர் ஏரியின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புயல் நிவாரண முகாம்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

முதல்வர் பேட்டி 

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை கொட்டும்மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அதன் விபரம் வருமாறு -

கேள்வி: இன்று(நேற்று) அரசு விடுமுறை அறிவித்துவிட்டீர்கள். ஆனால் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறதே?.

பதில்: நான் முன்னர் குறிப்பிட்ட திருவாரூர், நாகை,தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்,செங்கல்பட்டு ஆகிய 13 மாவட்டங்களுக்கும் நாளையும் (இன்று) விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

கேள்வி: நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருகிறீர்கள். நிவாரணத் தொகை ஏதும் வழங்கப்படுமா?

பதில்: ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்படுவதன் அடிப்படையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

கேள்வி: நிறைய விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். கஷ்ட காலங்களில் பயிர்க் காப்பீடு செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதே?

பதில்: அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே வேளாண் துறை செயலாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இவ்வளவு மழையிலும் இங்கே வருகை புரிந்து, நான் அறிவித்த செய்தியை பொதுமக்களுக்கு அளிக்கவிருக்கின்ற ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து