தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      தமிழகம்
Radhakrishnan 2020 11 16

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் பல்வேறு சந்தேகங்களுக்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என மத்திய அரசின்கீழ் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்பினால் உறுதி செய்த பின்பே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுயவிருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் விடுபட்டதில் இருந்து 14 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்கள் தடுப்பூசி முகாமுக்கு வருவதால் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும். 

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி, மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை போலவே பயனுள்ளதாக இருக்கும். முன்னுரிமை உள்ளவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு, இணையத்தில் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்த பின்னர் தடுப்பூசி போடப்படும். கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். தடுப்பூசிக்கு பதிவு செய்யவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.  

தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு அரைமணி நேரம் சுகாதார மையத்திலேயே அமர்ந்திருக்க வேண்டும். ஏதேனும் அசவுகரியத்தை உணர்ந்தால் சுகாதார அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும். மற்ற தடுப்பூசிகள் போன்று, பொதுவான எதிர்மறை நிகழ்வுகளான லேசான காய்ச்சல், வலி போன்றவை சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதுபோன்ற நிகழ்வுகளில் உடனடியாக சிகிச்சை அளிக்க தயாராக இருக்க அனைத்து டாக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புற்றுநோய், நீரிழிவுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும். 

கொரோனா தடுப்பூசியின் வரவு குறைவாக இருப்பதால், முதலில் முன்னுரிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசியின் உற்பத்தி நிலையைப் பொறுத்து, தேவையின் அடிப்படையில் அனைவருக்கும் வழங்கப்படும். 28 நாட்கள் இடைவெளியில் 2 தவணையாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 2 வாரங்களுக்கு பிறகு, பாதுகாக்கும் அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து