ஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன ? முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      அரசியல்
Edappadi 2020 11 25

சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் ஸ்டாலின் இருந்தாரே, சென்னைக்கு அவர் என்ன செய்தார். தூங்கி கொண்டிருந்தாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அசோக் நகர் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.நகர் பி.சத்தியா தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 1 மணி நேரம் பேசினார். அப்போது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். தி.மு.க.வை கடுமையாக தாக்கி பேசினார். ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் ஏழை மக்களை எண்ணி, எண்ணி கொண்டுவந்த திட்டங்களைப் போல அம்மாவின் அரசும் ஏழை மக்களைப் பாதுகாக்க திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு ஒரு வருட காலத்திற்கு வழங்குவதற்குத் தேவையான நீரை ஏரிகளில் நிரப்பி வைத்துள்ளோம்.

பருவ காலங்களில் பொழிகின்ற மழை நீரை ஒரு சொட்டுகூட வீணாக்காமல் ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சேமித்து வைக்க குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டு வந்த அரசு எங்கள் அரசு. அனைத்துக் கூட்டங்களிலும் அ.தி.மு.க. ஆட்சியில் எந்தத் திட்டங்களும் நடைபெறவில்லை என்று கூறி வருகிறார் ஸ்டாலின். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் தான் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். புரட்சித்தலைவி அம்மா கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அம்மாவின் அரசு அதனை கட்டி முடித்து, திறந்து வைத்து தற்போது தண்ணீர் தேக்கி வைத்து உள்ளோம்.

மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் மீஞ்சூர் மற்றும் நெமிலியில் தலா 100 மில்லியன் லிட்டர், நெமிலியில் மேலும் (150+400) 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு எங்கள் அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கொடுங்கையூரில் சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து ஸ்ரீபெரும்புதூருக்கு, வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். ஸ்டாலின், இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

சென்னை மாநகர மக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு பல்வேறு பாலங்கள் சாலைகளை எங்கள் அரசு அமைத்துக் கொடுத்துள்ளது. ரங்கராஜபுரம், தங்கசாலை சந்திப்பு, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, பேசின் சாலை, வடபழனி பல்லாவரம் மேம்பாலம், வில்லிவாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை, எம்.ஜி. ரோட்டில் சுரங்கப்பாதை, கொரட்டூர் ரெயில்வே கீழ்ப் பாலம் என பல்வேறு பானங்களை கட்டிக்கொடுத்த அரசு எங்கள் அரசு.

ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது ஐந்து வருடங்களாக என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. அதன் பிறகு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதும் எதுவும் செய்யவில்லை. ஆனால் கனமழை பொழிந்த போது பார்க்கின்ற இடங்களிலெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதையெல்லாம் அகற்றுவதற்காகத் தானே மேயராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் ஆக்கினார்கள், அப்பொழுதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தீர்களா?

சென்னை மாநகரத்தில் 12,000 சாலைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 39 ஆயிரத்து 500 மழைநீர் கால்வாய்கள் தற்போது உள்ளன. 954 கிலோ மீட்டர் மழைநீர் கால்வாய்களை சீரமைத்துள்ளோம். அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மழைக்காலங்களில் ஏறத்தாழ மூன்றாயிரம் சாலைகளில் தேங்கி இருந்த நீர் அகற்றப்பட்டுள்ளன. நீங்கள் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அரசு அம்மாவின் அரசு.

அடையாறு, கூவம் சீரமைப்பு, கரைகளை பலப்படுத்தியது, தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பல பணிகளுக்கு ரூபாய் 1,190 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். அரசைப் பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். கொளத்தூர் -வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பாலம், ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பாலம், மேடவாக்கம் சந்திப்பில் மேம்பாலம், வேளச்சேரி சந்திப்பு, கீழ்க்கட்டளை சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம், கொளத்தூர் வலது மேம்பாலம், நெடுங்களத்தூர் ரெயில்வே மேம்பாலம், ராதா நகர் ரெயில்வே கீழ் பாலம் என பல்வேறு பாலங்களை கட்டிக் கொண்டிருக்கிறோம்.

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க 60 கிலோ மீட்டர் நீள வெளி வட்டச்சாலை அமைத்துள்ளோம். வண்டலூர்- நெமிலிச்சேரி சாலை, நெமிலிச்சேரி- மீஞ்சூர் கட்டம் I, தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமல் பாதியில் விட்டுச் சென்றதை அம்மாவின் அரசே கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. கட்டம் II சாலையையும் அம்மாவின் அரசு தான் நிறைவேற்றியுள்ளது.

அதேபோல, 121 கிலோமீட்டர் சென்னை எல்லைச் சாலை ஐந்து பகுதி எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில பகுதிகளுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அரசின் மீது குற்றம் சுமத்தி அனுதாபங்களை பெற முயற்சி செய்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. அரசு தான் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகரத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 39 திட்டப் பணிகள் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. ரூ. 225 கோடி மதிப்பீட்டில் 11 திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ளன. தியாகராயர் நகர், தியாகராயர் சாலையில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலும் முடிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். 19-ம் தேதி பிரதமரை சந்தித்து இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுக்க இருக்கிறேன். அவர் அறிவிக்கும் தேதியில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

மெட்ரோ ரயில் ரூபாய் 62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 123 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க, ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றுள்ளார். இதில் 122 ரெயில் நிலையங்கள் வரவிருக்கின்றன. மாதவரம் சிப்காட் வழி ஆலந்தூர், மாதவரம் சோழிங்கநல்லூர் வழி அடையார், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடங்களில் அமையவிருக்கிறது. இத்திட்டங்கள் அனைத்தும் சென்னை மாநகர மக்களுக்கானது. ஆனால் ஸ்டாலினுக்கு மட்டும் இது தெரியவில்லை. அவருக்கு பார்வையில் கோளாறா? ஞாபக சக்தியில் கோளாறா? என்பது தெரியவில்லை. இதன் மூலமாவது அவர் தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து