புதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பின், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கும் 2-வது பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.
சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் நகரில் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்தக் கோயிலின் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைந்ததை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக தலைவர் இல்லாமல் செயல்பட்டு வந்தது. சோம்நாத் கோயில் அறக்கட்டளைத் தலைவராக கேசுபாய் படேல், கடந்த 2004 முதல் 2020-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்தார்.
கேசுபாய் படேல் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தின் முடிவில், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக ஒருமனதாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், குஜராத் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டு வரும் அறக்கட்டளையைப் பாராட்டியுள்ளார்.
கோயிலின் வசதிகள், உள்கட்டமைப்பு, தங்கும் வசதிகள், பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் போக்குவரத்து வசதிகளை வரும் காலங்களில் சிறப்பாக மேம்படுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
சோம்நாத் கோயிலின் அறக்கட்டளை நிர்வாகிகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.டி.பார்மர், தொழிலதிபர் ஹர்ஸவர்தன் நியோஷியா ஆகியோரும் செயலாளராக பி.கே. லாஹேரியும் உள்ளனர்.