உலக நாடுகளுக்கு தடுப்பூச சப்ளை: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      உலகம்
India-US 2021 01 23

அண்டை நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பியிருப்பதற்கு அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் கடந்த ஜன., 16-ம் தேதி தொடங்கியது. அது மட்டுமின்றி ஜனவரி 21 முதல் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி அனுப்பி வைத்து வருகிறது. முதல்கட்டமாக நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பு மருந்துகளும், பூடானுக்கு, 1.50 லட்சம், மாலத்தீவுகளுக்கு 1 லட்சம் , வங்கதேசத்துக்கு, 20 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி அனுப்பப்பட்டன. பாகிஸ்தான் நாடு கோரிக்கை வைக்காததால் அந்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை. வியாழனன்று அந்நாட்டிற்கு சீனா 5 லட்சம் சினோபார்ம் மருந்துகளை அனுப்பியது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த முயற்சியை அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெற்காசியாவில் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசியைப் பகிர்ந்துள்ளீர்கள். உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்கை நாங்கள் பாராட்டுகிறோம். மாலத்தீவு, பூடான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி அனுப்பியுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு இதனை விரிவுப்படுத்த உள்ளது. தனது மருந்தைப் பயன்படுத்தி உலகளாவிய சமூகத்திற்கு உதவும் இந்தியா, ஒரு உண்மையான நண்பர்.என பாராட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து