சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 23.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை சார்பில் 4 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடங்கள், பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடம், தொழிற்பயிற்சி மையக் கட்டிடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், 21 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநல ஆணையரக அலுவலகக் கட்டிடம் மற்றும் 2 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஒருங்கிணைந்த சேவை மையத் திட்டத்தின் மூலம், குடும்பத்திலும், பொதுவெளியிலும் வன்முறையால் பாதிக்கப்படும் மற்றும் நிராதரவாக விடப்படும் பெண்களுக்கு தேவைப்படும் துரித சேவைகளான மருத்துவ உதவி, காவல் உதவி, சட்ட உதவி, மனநல ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் வழங்கிடும் வகையில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகங்களிலும் 2 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டிடங்கள்,
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தாராபடவேடு கிராமம், ராஜீவ் காந்தி நகரில், தரை மற்றும் முதல் தளத்துடன், 21 தங்கும் அறைகள், சமையல் அறை, உணவருந்தும் அறை ஆகிய வசதிகளுடன் 50 மகளிர் தங்கும் வகையில், ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடம், சமூக பாதுகாப்புத் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் அரசினர் மாணவர் பிற்காப்பு நிறுவனத்தில் 39 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிற் பயிற்சி மையக் கட்டிடம், வேலூர் மாவட்டம், காட்பாடி, அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம் என மொத்தம் 4 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூகநலத் துறை கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம், காமராஜர் சாலை, டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகத்தில் 26,045 சதுர அடி கட்டட பரப்பளவில், அலுவலக அறைகள், கூட்ட அரங்கம், பார்வையாளர்கள் அறை, நூலகம், பதிவறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 8 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநல ஆணையரகத்திற்கான அலுவலகக் கட்டிடம்,
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 158 மகளிர் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், பொன்மலையில் 5 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 104 மகளிர் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடம் என மொத்தம் 21 கோடியே 24 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சமூகநலத் துறை சார்பில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை திட்ட அலுவலர் சபிதா, (ஓய்வு), சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, சமூகநல ஆணையர் ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.