இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது: கோவையில் பிரதமர் மோடி பெருமிதம்

வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2021      தமிழகம்
modi-2021-02-25

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி பேசினார். 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை சென்னை வந்தார்.  இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 10.20 மணியளவில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டார்.  அங்கு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்.  இதற்காக சென்னை வந்த அவர், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார்.  கோவையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். 

ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை  பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரெயில்வே பாலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.  ரூ.20 கோடி செலவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின் சக்தி தொகுப்புக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1,280 குடியிருப்புகள், திருக்குமரன் நகரில் கட்டப்பட்ட 1,248 குடியிருப்புகள், மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள், திருச்சி இருங்கலூரில் கட்டப்பட்ட 1,088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 

கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்பட 9 'ஸ்மார்ட்' நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

தமிழில் வணக்கம் எனக்கூறி விழாவில் உரையாற்றிய பிரதமர் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி  பேசியதாவது, 

பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். தமிழ்நாட்டிற்கு நல்ல பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பவானிசாகர் அணை விரிவாக்கம் திட்டம், தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு மேம்பாடு அளிக்கும் திட்டம்.  தொழில் வளர்ச்சியில் தமிழகத்திற்கு முக்கியப் பங்கு  உள்ளது. தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்காற்றுகிறது. தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையானது தடையில்லா மின்சாரம். புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதத்திற்கும் அதிகமான மின்சாரம் தமிழ்நாட்டிற்கே பயன்படும்.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு பகுதியில் சாகர் மாலா திட்டத்தின் கீழ், சரக்கு வாகன நிறுத்தப் பூங்கா தொடங்கப்படவுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து