ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தால் ஜோ பைடன் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர அந்த நாட்டு அரசும் தலீபான் பயங்கரவாத அமைப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தால் அமெரிக்க அதிபர் ஜோபைடன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்,
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் அமைதியை உறுதி செய்வதற்கான அடுத்த நடவடிக்கைகளை பரிசீலிக்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். முன்னதாக ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிப்புச் சம்பங்களில் தலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது.