சீனாவை பார்த்து அஞ்சுகிறார் மோடி : தூத்துக்குடியில் ராகுல் காந்தி பேச்சு

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      இந்தியா
Rahul-Gandhi-2021-02-12

Source: provided

தூத்துக்குடி : காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் ஏற்கனவே அவர் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

தொடர்ந்து தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். 

இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர் நீங்கள் பிரதமர் மோடி பயனற்றவராக இருக்கிறார் என்று கூறினீர்கள். நான் அதில் சிறு திருத்தம் செய்ய விரும்புகிறேன். இங்கே ஒவ்வொரு மனிதரும் யாரேனும் ஒருவருக்கு உதவியாகத் தான் இருக்கிறோம். நான் விவசாயிகளுக்கு, ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்றால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்நாட்டில் இருவருக்கு ( அம்பானி, அதானி) மிகப்பெரிய உதவியாக இருக்கிறார். நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையில் அவர் உதவியாக இருக்கிறார் என்று கூறினார். 

மேலும் மதச்சார்பின்மை நம் அரசியல் சாசனத்தின் அடிநாதம் மட்டுமல்ல. அது தேசத்தின் கலாச்சாரம். பா.ஜ.க. அரசு மதச்சார்பின்மையை சிதைத்துவிட்டது. விவசாயிகள் போராட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை பா.ஜ.க. அரசு ஒடுக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை கேள்வி கேட்பவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில், தேசத்தை ஒன்றிணைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சுதந்திர பத்திரிகைகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்துள்ளது. மோடியும், அமித் ஷாவும் நாட்டில் இருவர் நலனுக்காகவே மட்டுமே செயல்படுகின்றனர். ஆனால் காலம் வரும். அப்போது இந்த இருவரும் தூக்கி எறியப்படுவர். நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு நான் முழு ஆதரவில் இருக்கிறேன். 

இந்திய பிரதமர் சீனாவை பார்த்து அஞ்சுகிறார். டோக்லாம் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்தபோது எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. 2013-ம் ஆண்டு சீனா இந்தியாவிற்குள் நுழைந்த போது காங்கிரஸ் பதிலடி கொடுத்தது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து