Gautam-Gambhir 2021-04-16

Source: provided

சி.எஸ்.கே தன்னுடைய முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் டோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். அந்தப் போட்டியில் அவர் 7-ம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.  இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கவுதம் காம்பீர் "சி.எஸ்.கே அணியை வழி நடத்தும் விதமாக டோனி பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கி விளையாட வேண்டும். 

ஒரு அணி தலைவராக அவர் வழி நடத்த வேண்டும். 7-ம் வீரராக களமிறங்கி ஒருபோதும் அணியை வழி நடத்த முடியாது. அதேபோல அணியின் பவுலிங் வரிசையிலும் பிரச்னை இருக்கிறது" என்றார். மேலும் பேசிய அவர் "இப்போது இருக்கும் டோனி நாம் 5 ஆண்டுக்கு முன்பு பார்த்தவர்போல இல்லை. அப்போதெல்லாம் டோனி எதுவாக இருந்தாலும் முதலில் தாமே முன் வந்து செய்ய தொடங்குவார். என்னை பொறுத்தவரை டோனி 4 அல்லது 5 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். அதற்கு கீழே களமிறங்க கூடாது" என்றார் கவுதம் காம்பீர்.

_________________________

கோலிக்கு 'விஸ்டன்' இதழ் கௌரவம்

கிரிக்கெட்டின் பைபிள் என்று வா்ணிக்கப்படும் விஸ்டன் வருடாந்திர இதழானது ஆண்டுதோறும் தலைசிறந்த கிரிக்கெட் வீரா்கள் அடங்கிய பதிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா்களாக திகழ்ந்தவா்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1970-களின் சிறந்த வீரராக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சா்ட்ஸையும், 1980-களின் தலைசிறந்த வீரராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவையும், 1990-களின் தலைசிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கரையும், 2000-களின் சிறந்த வீரராக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளா் முத்தையா முரளீதரனையும், 2010-களின் சிறந்த வீரராக தற்போதைய இந்திய கேப்டனான விராட் கோலியையும் தோ்வு செய்துள்ளது விஸ்டன் இதழ்.

________

சவாலாக அமைந்த சென்னை மைதானம்!

நடப்பு ஐ.பி.எல் சீசன் கிரிக்கெட்டில் சென்னை மைதானத்தில் இலக்கை கடப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் என்று அறியப்பட்ட சென்னை சேப்பாக்கம் மைதானம் நடப்பு ஐ.பி.எல் சீசனில் இலக்கை துரத்துவதற்கு மிகவும் கடினமான மைதானமாக மாறியுள்ளது. 

இங்கு நடந்த 4 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பந்து வீசிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட ஒரு போட்டியிலும் கடைசி பந்திலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி மெதுவான பந்துகள் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக ஒத்துழைக்கிறது சென்னை மைதானம்.

________

டோனிக்காக பாடல் வெளியிட்ட ரசிகர்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவருக்கு டோனி மீது இருந்த அளவு கடந்த பாசம். இந்த அதீத அன்பால் கடந்த ஆண்டு தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் வண்ணமான மஞ்சள் நிறத்திற்கு மாற்றினார். அதில் டோனியின் படத்தை வரைந்து பாசத்தை வெளிக்காட்டினார். இது உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு கோபிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் பாடலாசிரியர் கானா ருத்ரா பாடல் வரிகளில், சபேஷ் சாலமான் இசையில் கோபிகிருஷ்ணனே பாடி அந்த பாடலுக்கு கோபிகிருஷ்ணன் நடனமாடி அதனை காட்சி படுத்தியுள்ளார். இந்த பாடலை சமூக வலைதளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இது மிகப்பெரிய அளவில் டோனி ரசிகர் மத்தியில் சென்றடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்காக 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை செலவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார் ஒட்டு மொத்தமாக இந்த பாடல் காட்சிகள் 4.30 நிமிடம் இசையுடன் காட்சி படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து