முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு வழங்க கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் எங்களிடம் இல்லை: இங்கிலாந்து கைவிரிப்பு

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

இந்தியாவுக்கு வழங்க கூடுதல் தடுப்பூசிகள் எங்களிடம் இல்லை என இங்கிலாந்து அரசு கைவிரித்து விட்டது.

நாட்டில் கொரோனாவின் 2-வது அலையில் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன.  முதல் அலையில் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.  இதனால், பல நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது.  இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டில், உலக அளவில் மக்கள் தொகையில் 2-வது இடத்திலுள்ள இந்தியாவில் பாதிப்பின் தீவிரம் நாள்தோறும் உச்சமடைந்து வருகிறது.  நேற்று முன்தினம் 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். 3 ஆயிரத்து 293 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால், பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

இந்தியாவில் மருந்து, தடுப்பூசி ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன என்று பல மாநிலங்களில் புகார்கள் எழுந்தன.  மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளும் போதிய அளவில் இல்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன.

பிரதமர் மோடியுடன் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மற்றும் குணமடைய உதவும் ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளை வழங்குவது உள்பட இந்தியாவுக்கு தேவைப்படும் முழுமையான உதவிகளை உடனடியாகவும், தொடர்ச்சியாகவும் அமெரிக்கா செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான இயந்திரங்களுக்கு தேவையான இயந்திர பாகங்களையும் நாங்கள் அனுப்பி வைத்து வருகிறோம்.  இந்தியாவுக்கு தடுப்பூசிகளை எப்பொழுது எங்களால் அனுப்பி வைக்க முடியும் என்பது பற்றியும் இந்திய பிரதமர் மோடியுடன் விவாதித்துள்ளேன். அமெரிக்கா கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையில் சிக்கி தவித்த போது, இந்தியா எங்களுக்கு உதவி செய்தது என்று பேசினார்.

இதேபோன்று, இந்திய - ரஷ்ய கூட்டுறவின் அடிப்படையில் கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு ரஷ்யா கணிசமான உதவிகளை வழங்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை இங்கிலாந்து அளித்துள்ளது.  

இந்நிலையில், இங்கிலாந்து சுகாதார அமைச்சர் மேன் ஹேன்காக் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, தற்போதுள்ள சூழலில் இந்தியாவுக்கு வழங்குவதற்கான கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் எதுவும் எங்களிடம் இல்லை என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து