முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உள்பட 15 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி உட்பட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அ.தி.மு.க.வினரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என,  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தை சமதர்மத்தின் புதிய பூமியாக மாற்றிட ஏழை, எளிய, உழைக்கும் வர்க்கத்தினரும், புதுவாழ்வு காண புதிய பாதை தேடிய இளைஞர் கூட்டமும், தியாகத் திருவிளக்குகளாம் தாய்க்குலமும் கண்ட மாபெரும் கனவை அ.தி.மு.க. என்ற ஒப்பற்ற இயக்கத்தின் மூலம் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க.வைக் காணாமல் போகச் செய்து விடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக் கணக்குகளை தூள், தூளாக்கி, மீண்டும் அ.தி.மு.க.வை உலகம் புகழும் இயக்கமாக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளை அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மீது, அ.தி.மு.க. உடன்பிறப்புகள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, கண்ணை இமை காப்பதுபோல் அ.தி.மு.க.வைக் காத்து நிற்கும் காவல் தெய்வங்களாய் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.

'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வில் புயல் வீசும்; அனைத்தும் தகர்ந்து போய்விடும்; இனி தமிழகத்தில் குழப்பம் தான் மிஞ்சும்' என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, 'எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே' என்று மெய்ப்பித்து ஜெயலலிதா அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த சாதனையைக் கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர்.

மக்களின் பேரன்பைப் பெற்று, அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக, அ.தி.மு.க.வின் 66 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர், அ.தி.மு.க.வை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்.  சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, இப்போது அ.தி.மு.க இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அ.தி.மு.க.வை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக விநோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் ஓங்கு புகழ் பெற்றிருக்கும் அ.தி.மு.க. மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்பதை நினைவுபடுத்துகிறோம்.  அ.திமு.க.வின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, கடந்த 23.5.2021-ம் தேதியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் அ.தி.மு.க.வில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும்; இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியின் மூத்த முன்னோடிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து, 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ததோடு, 234 தொகுதிகளிலும் தங்களின் பொன்னான வாக்குகளை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் கரம்கூப்பி நன்றி கூறுகிறோம். 

இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்துள்ளனர். அனைத்து அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர். 

இந்த நிலையில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து