புதுச்சேரி நகராட்சி ஊழியர் வீட்டில் இருந்த 4 சாமி சிலைகள் பறிமுதல்

Arasu-05

Source: provided

புதுச்சேரி: புதுச்சேரியில் நகராட்சி ஊழியர் வீட்டில் இருந்து 4 சாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ். நகராட்சி ஊழியர். இவரது வீட்டில் சாமி சிலைகள் இருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் தலைமையில் போலீசார் புதுச்சேரி வந்தனர். அவர்கள் சுரேஷ் வீட்டில் சிலைகள் உள்ளதா? என்பதை சோதனை செய்ய அனுமதி பெற்று வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு அறையில் உலோகத்தினால் ஆன சுமார் 3 அடி உயரமுள்ள 2 நடராஜர், 2 அம்மன் சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சிலைகளை போலீசார் கைப்பற்றி ஜீப்பில் ஏற்றினர். ஆனால் சுரேஷ் உறவினர்கள் அந்த சிலைகளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அந்த சிலைகளை பறிமுதல் செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் 4 சிலைகளையும் தமிழ்நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினோம். அங்கு 2 நடராஜர், 2 அம்மன் சிலைகள் கிடைத்தது. இந்த சிலைகள் சுமார் தலா 3 அடி உயரமும் தலா 40 கிலோ எடையும் உள்ளது. இந்த சிலைகள் பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்படும். சோதனையின் முடிவில் அந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனதா? அல்லது பித்தளையா? என்பது தெரியவரும். அதன்பின் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து