ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெயிற்சி சென்ற நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொலை

Judge--Uttam-Anand-2021 07

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெயிற்சி சென்ற நீதிபதி ஒருவர் ஆட்டோ ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஜாமீன் கொடுக்க மறுத்ததால் நடந்த கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாக் மாவட்ட நீதிபதியாக இருந்தவர்  உத்தம் ஆனந்த். அவர்  ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று முன் தினம் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் மீது பின்னால்  வந்த ஆட்டோ ஒன்று படுவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

நீதிபதி மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது ஆட்டோ  ஒன்று மோதியதுடன் நிற்காமல் சென்றது சி.சி.டி.வி. காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசாரிடம் அளித்த புகாரில், நீதிபதியின் மனைவி கிருதி சின்ஹா கூறியதாவது:-

எனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார்.  அவர் நீண்ட நேரம் திரும்பி வராதபோது, குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். அவரை உள்ளூரை சேர்ந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது, பின்னால் இருந்து ஒரு ஆட்டோ  அவரைத் தாக்கி உள்ளது. தயவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் என்று கூறி உள்ளார். 

இதனால் நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சஞ்சீவ் சிங் உதவியாளர் ரஞ்ஜீவ் சிங் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு ஜாமின் கொடுக்க அண்மையில் நீதிபதி உத்தம் ஆனந்த் மறுத்துவிட்டார். 

சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதில் உண்மையை வெளிக்கொண்டு வர சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் ஐகோர்ட் வழக்கறிஞர் பிரபாத் சின்ஹா கூறும் போது இது ஒரு திட்டமிட்ட கொலை. ஆட்டோ டிரைவர் வேண்டுமென்றே நீதிபதியைத் தாக்கியதை சி.சி.டி.வி. காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன என கூறினார்.

நடைபயிற்சி சென்ற ஒரு நீதிபதியே கொலை செய்யப்பட்டிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து