கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி கேரளாவில் மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு

Kerala-curfew-2021 07 29

Source: provided

 திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் கேரளாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிந்த வாரத்தில் மட்டும் கேரளாவில் 1,10,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது கொரோனா பாஸிட்டிவ் ரேட் 11 சதவீதமாக இருக்கிறது. அங்கு தற்போது 22,056 பேருக்கு தொற்று உறுதியானது.

பெரிய மாநிலங்களில் கேரளாவில் மட்டுமே தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றை தவிர நாட்டின் மற்ற மாநிலங்களில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

கேரளாவில் மட்டும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து