முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு கார் நுழைவு வரி பாக்கி விவகாரம் : நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் ரூ.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்தவும் உத்தரவு

வியாழக்கிழமை, 5 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: நடிகர் தனுஷ் தன் சொகுசு காருக்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி ரூ.30லட்சத்து 30ஆயிரத்து 757-ஐ 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் நடிகர் தனுசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கத் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019-ல் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியைச் செலுத்தும் பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 30 லட்சத்து 33 ஆயிரத்தைச் செலுத்தியதாக, தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விதிகளைப் பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியைத் திங்கட்கிழமைக்குள் (ஆக. 09) செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படியும் கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறுவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் எனக் குறிப்பிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, வரியைச் செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் இதுவரை செலுத்தாத நிலையில், வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும், இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்கள் வரிப் பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும்போது வரியைச் செலுத்த வேண்டியதுதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை, நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலுக்கு ஜி.எஸ்.டி. செலுத்த முடியவில்லை என, அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்கும்படியும் அறிவுறுத்தினார்.

நடிகர் தனுஷ் நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாகக் கணக்கிட்டு, மதியம் 2:15 மணிக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவுக்காக மதியம் தள்ளிவைத்திருந்தார்.

அதன்படி நேற்று மதியம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 லட்ச ரூபாய் தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி என, வணிக வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான். வழக்கை வாபஸ் பெறும் தனுஷ் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மீதத்தொகை ரூ.30லட்சத்தி 30ஆயிரத்து 757-ஐ 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

மேலும், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால், அதை ஏற்கக் கூடாது என்றும், விதிகளைப் பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமைப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து