வினேஷ் போகத் தோல்வி

Vignesh-bhogat-05-08-2021

Source: provided

வினேஷ் போகத் தோல்வி 

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில்  ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வினேஷ் போகத் தோல்வி அடைந்தார்.  பெலாரசில் வனேசாவிடம் 3-9 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார் இந்தியாவின் வினேஷ் போகத். 

____________

அன்ஷூ மாலிக் தோல்வி

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் ‘ரெபிசாஜ்’ வாய்ப்பில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் ரஷியாவின் வளரியா கோப்லோவா எதிர்கொண்டார்.இதில் வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இரு வீராங்கனைகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடினார்கள். இருவரும் பிடிகொடுக்காமல் விளையாடினார்கள். முதல் மூன்று நிமிடத்தில் டெக்னிக்கல் முறையில் ரஷிய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார்.

அடுத்த மூன்று நிமிடங்களிலும் சிறப்பான வகையில் மல்லுக்கட்டினர். இந்த முறை டெக்னிக்கல் முறையில் இந்திய வீராங்கனை ஒரு புள்ளி பெற்றார். இதனால் 1-1 என ஸ்கோர் சமநிலையில் இருந்தது. கடைசி ஒரு நிமிடத்தில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ரஷிய வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார்.  இதனால் 2, 2 என இரண்டு முறை ரஷிய வீராங்கனை புள்ளிகள் பெற்றார். ஆகவே, அன்ஷூ மாலிக் 1-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

______________

குண்டு எறிதல்: அமெரிக்காவுக்கு தங்கம்

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், நியூசிலாந்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீரர்களும் தலா ஆறு முறை குண்டு எறிதல் வேண்டும். ஆறு வாய்ப்புகளில் எந்த வாய்ப்பில் வெகுதூரத்திற்கு குண்டு எறிந்தார்களோ, அது அவருடைய செயல்பாடாக எடுத்துக் கொள்ளப்படும்.

அமெரிக்க வீரர் ரியான் குரோசர் 6-வது வாய்ப்பில் 23.30 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன்  ஒலிம்பிக் சாதனையை பதிவு செய்தார். மற்றொரு அமெரிக்க வீரர் ஜோ கோவாக்ஸ் 22.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஷ் 22.47 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

_____________

110மீ தடைதாண்டுதல்: ஜமைக்காவுக்கு தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100மீ தடைதாண்டும் ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 8 வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில் ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு அதிர்ச்சி அளித்தார். ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

____________

சர்ச்சைக்குள்ளான கம்பீர் கருத்து

41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது, இந்த வெற்றி கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிகளை விடவும் பெரிது என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1983, 2007, 2011 உலகக்கோப்பை வெற்றிகளை மறப்போம். ஹாக்கியில் இந்த பதக்கம் எந்த ஒரு உலகக்கோப்பையை விடவும் பெரியது” என்று பதிவிட்டுள்ளார். ஆனால் கவுதம் கம்பீரின் இந்த கருத்து ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடமும் எடுபடவில்லை. இரண்டு விளையாட்டுகளையும் ஒப்பிடுவதே தவறு என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து