மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புகிறார்: மெகபூபா முப்திக்கு பா.ஜ.க. கண்டனம்

Mehbooba 2021 08 22

Source: provided

ஸ்ரீநகர்: மக்களிடையே மெகபூபா முப்தி வெறுப்புணர்வை பரப்புகிறார் என்று காஷ்மீர் மாநில பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்ப்பதுடன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி மத்திய அரசை எதிர்த்து கடுமையாக பேசி வருகிறார்.

கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதே நிலை ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஏற்பட வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கும் விதத்தில் மெகபூபா முப்தி பேசியிருந்தார்.  இதுகுறித்து மெகபூபா முப்தி கூறுகையில், 

மத்திய அரசு எங்களை பரிசோதிக்க வேண்டாம். மத்திய அரசு அண்டை நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்திருக்கும். சூழ்நிலையை புரிந்து கொண்டு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சரி செய்ய வேண்டும்.  வல்லரசு நாடான அமெரிக்கா அவர்களுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து ஓடி விட்டது. சட்டவிரோதமாக, அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக ஜம்மு-காஷ்மீரின் அடையாளத்தை பறித்துக் கொண்ட தவறை சரி செய்து கொள்ள முன்னாள் முதல்வர் வாஜ்பாய் போன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் அது மிகக் காலதாமதமாகி விடும். இந்திய அரசு எங்களிடமிருந்து பறித்ததை திருப்பித் தர வேண்டும், மற்றும் காஷ்மீர் பிரச்சினையை அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

மெகபூபா முப்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா இது குறித்து கூறுகையில், மெகபூபா முப்தி தவறான கருத்துக்களை கொண்டுள்ளார். இந்தியா சக்தி வாய்ந்த நாடு.  நமது பிரதமர் மோடி ஜோ பைடனை போன்றவர் அல்ல. இந்தியாவுக்கு எதிராக சதி செய்வர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள்.  ஜம்மு காஷ்மீர் மக்கள் தேச பக்தி மிக்கவர்கள். அவர்கள் காவல்துறைக்கு உதவி செய்கிறார்கள். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் ராணுவம், துணை ராணுவத்திற்கு உதவி புரிகிறார்கள்.  மெகபூபா முப்தியை மக்கள் நிராகரித்து விட்டார்கள். ஆகவே, தற்போது ஆப்கானிஸ்தானை அழித்த தலிபான்கள் பற்றி பேசுகிறார் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து