அசாமில் இடைவிடாத கனமழை எதிரொலி: வெள்ளத்தில் மிதக்கும் 11 மாவட்டங்கள்

Assam 2021 08 29

Source: provided

கவுகாத்தி : வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.  இடைவிடாது பெய்து வரும் மழையால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அசாமின் பெரிய நதியான பிரம்மபுத்திராவிலும், அதன் துணை ஆறுகளிலும் வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பிஸ்வனாத், பொன்கைஹான், சிராங், டேமாஜி, திப்ருகர், ஜோர்ஹட், லக்கிம்பூர், மஜூலி, சிவசாகர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.  அந்த மாவட்டங்களில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 1.33 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 7 ஆயிரம் பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ளவர்களை மீட்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பதால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வெள்ள நீரின் அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து