முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மோதல்; புதுச்சேரியில் 3 கிராமங்களில் 144 தடை உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும், அதை ஒட்டிய நல்லவாடு பகுதி மீனவர்களுக்கும் இடையே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்துவதில் மோதல் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் நேற்று முன்தினம் நல்லவாடு மீனவர்கள் சின்ன வீராம்பட்டினம் ஒட்டிய பகுதிக்கு வந்து நடுக்கடலில் சுருக்குமடியை பயன்படுத்தி மீன் பிடித்ததாக தெரிகிறது. இதற்கு அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பு மீனவர்களும் நடக்கடலில் திடீரென வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த தகராறு முற்றி படகோடு படகை மோதச் செய்து சேதப்படுத்தினர். இதில் ஆத்திரமடைந்து நாட்டு வெடிகுண்டு வீசியும், சுளுக்கி, துடுப்பு, கட்டை, தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகுகளில் இருந்த படியே ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து புதுக்குப்பம் பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன், தெற்கு போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன் தலைமையில் தவளக்குப்பம், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் போலீசார் நூற்றுக்கணக்கானோர் கடற்கரை பகுதிகளில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கடற்கரை பகுதியில் அவர்கள் ரோந்து சென்று மோதல் நடந்த பகுதியில் இருந்த மீனவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் நல்லவாடு, புதுக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   இந்நிலையில், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் 04.09.2021 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும்,  அந்த தடை உத்தரவின்படி 3 கிராமங்களிலும் 5 பேருக்கு மேல் நடமாடக்கூடாது. தேவையின்றி எங்கும் கூட்டம், போராட்டம் ஆகியவை நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதே மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து