மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு: மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Weather-Center 2021 09 09

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. 

இந்த நிலையில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் :

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும்.தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி ,திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 13-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  14-ம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்ட கடலோர மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

15-ம் தேதி நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

 

வரும் 15-ம் தேதி வரை மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதி ,வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து