வெளியூர் பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Tirupati 2021 07 02

Source: provided

திருப்பதி : திருப்பதியில் வெளியூர் பக்தர்களையும் இலவச தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.

திருப்பதியில் கடந்த வாரம் முதல் உள்ளூர் பக்தர்கள் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெளியூர் பக்தர்களையும் இலவச தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இலவச தரிசன டோக்கன்களை திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் வழங்கினால் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள்.  எனவே கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் வெளியூர் பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.

இதுதவிர ஏராளமான வெளியூர் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற ஆசையில் தினமும் திருப்பதிக்கு வந்து திரும்பி செல்கின்றனர். இலவச வாய்ப்பு இல்லாத காரணத்தால் வேண்டுதல்களை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கின்றோம் என்று சாதாரண பக்தர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்னைகளை கவனித்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை போல் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.  இன்னும் ஓரிரு வாரத்தில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கும் என்று தேஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து