முக்கிய செய்திகள்

கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் கரையோரப் பகுதிகளில் நீர் புகும் அபாயம்

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      தமிழகம்
Kerala 2021 10 16

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடியக் கொட்டிய அடைமழையால் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 17,376 கனஅடியும், பெருஞ்சாணி அணைக்கு 13,104 கனஅடியும் தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இதனால் நேற்று விநாடிக்கு 25,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரமாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நேற்று வரை விடிய விடிய அடைமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவிய நிலையில் சாலைகள், ஆறு, கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

ரப்பர் பால்வெட்டும் தொழில், மீன்பிடித் தொழில், தேங்காய் வெட்டுதல், மற்றும் தென்னை சார்ந்த தொழில்கள், செங்கல் உற்பத்தி, உப்பளம், மலர் வர்த்தகம், கட்டிடத் தொழில் உட்பட அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1374 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், பகலிலும் தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு உள்வரத்து தண்ணீர் அதிகரித்தது. நேற்று மதியம் நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 17,376 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. இந்த ஆண்டில் பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக வரும் தண்ணீரின் அதிக உள்வரத்து அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மாலை 4 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 15,919 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது.

48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 46 அடியைத் தாண்டியது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 15,029 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்தது. அணைக்கு 13,104 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 9,544 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 17 அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ள தண்ணீர் கோதையாற்றில் சேர்ந்து ஓடுவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் திற்பரப்பு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து