முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாற்று சாதனை: முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடியை கடந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் போடப்பட்ட  தடுப்பூசிகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம்.  ஜப்பானை விட ஐந்து மடங்கு, ஜெர்மனியை விட ஒன்பது மடங்கு மற்றும் பிரான்சில் போடப்பட்ட தடுப்பூசிகளின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்று மத்திய அரசு வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்து உள்ளது.

எட்டுமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 சதவீதம் பேர்  முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். ஜம்மு -காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம், தத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, கோவா மற்றும் லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில்  100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதல் டோஸ் தடுப்பூசி  90 சதவீதத்தை எட்டி உள்ளன.

தடுப்பூசி போடும் பணி  ஜனவரி 16, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தால் கடந்து வந்த மைல்கற்களை மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்ட 85 நாட்களில் முதல் 10 கோடி (100 மில்லியன்) டோஸ் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறி உள்ளது.

கோவின் - டிஜிட்டல் தளத்தில் இதுவரை 76 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். நாட்டின் தொலைதூர மூலைகளுக்கு தடுப்பூசிகளை வழங்க இந்தியா முதன்முறையாக டிரோன்களைப் பயன்படுத்தியது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 17 அன்று (பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள்) ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு  தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு மணி நேரத்திற்கு 15.62 லட்சம் டோஸ் அல்லது நிமிடத்திற்கு 26,000 டோஸ் அல்லது ஒவ்வொரு நொடியும் 434 டோஸ்  என  கணக்கிடப்பட்டு உள்ளது. வெறும் ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டாலும், போலியோ தடுப்பூசி (1994-2014) மைல்கல்லை கடக்க 20 ஆண்டுகள் ஆனது. சீனா மட்டுமே இதுவரை 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.  (மேலும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது). சீனா ஜூன் மாதம் மைல்கல்லை தாண்டியது.

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 99 கோடியே 85 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இருந்தது. அதில் முதல் டோஸ் ஊசியை 70 கோடியே 56 லட்சம் பேரும். 2-வது டோஸ் தடுப்பூசியை 29 கோடியே 28 லட்சம் பேரும் போட்டு இருந்தனர். நேற்று காலை வழக்கம் போல முகாம் தொடங்கியது. ஏராளமானோர் வந்து தடுப்பூசி போட்டனர். நேற்று காலை 9.40 மணி நிலவரப்படி தடுப்பூசி போடப்பட்ட எண்ணிக்கை 100 கோடி டோசை கடந்தது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. நாம் இந்திய அறிவியலின் மாண்பை, கூட்டுமுயற்சியின், செயலாக்கத்தின் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள் இந்தியா; 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி. இந்த சாதனையை எட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த விழாவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த பணி வெற்றிகரமாக அமைய உதவிபுரிந்த சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். டெல்லி செங்கோட்டை யில் நடந்த விழாவில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட பாடலை வெளியிட்டார். மேலும் இது சம்பந்தமான பட காட்சிகள் கொண்ட வீடியோவும் தயாரிக்கப்பட்டு இருந்தது. அதையும் அவர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இத்துடன் வாராந்திர சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரத்து 307 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், ''100 கோடி தடுப்பூசி என்ற சாதனை இலக்கை, 9 மாதங்களில் நாம் அடைந்திருக்கிறோம். இதுவரை, 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசியை செலுத்த முயற்சிக்க வேண்டும். இதுவரை 30 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் 10 கோடி பேர், இரண்டாவது தவணைக்கான காலக்கெடு முடிந்தும் இன்னும் அதனை செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். இரண்டாவது டோஸை தவறவிட்டவர்களைக் கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து