முக்கிய செய்திகள்

நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் சசிகலா 2-வது கட்ட சுற்றுப்பயணம்

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Sasikala 2021 10 26

Source: provided

மதுரை : சசிகலா 2-வது கட்ட சுற்றுப்பயணத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.

மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறிய சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

நேற்று முன் தினம் அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் சென்றார். அங்கு டி.டி.வி.தினகரனின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

இன்று (28-ந் தேதி) தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, மருது பாண்டியர்கள் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிக்கிறார்.

பின்னர் மதுரையில் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து நாளை (29-ந் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் புறப்பட்டு செல்கிறார். அங்கும் ஆதரவாளர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு மீண்டும் தஞ்சாவூர் புறப்பட்டு செல்கிறார். பின்னர் நவம்பர் 1-ந் தேதி ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். அங்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் திட்டங்கள் வகுக்கப்படுகிறது.

ஏற்கனவே 1996-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி கண்ட பின்னர் கடந்த 1998-ல் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட்டு மீண்டும் வெற்றி பாதைக்கு அ.தி.மு.க. திரும்பியது.

அதுபோல தற்போதும் நெல்லையில் பிரமாண்ட மாநாடு நடத்துவது குறித்து திட்டம் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எனவே 2-வது கட்டமாக சசிகலா நெல்லை உள்பட தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்துக்கு திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

1-ந் தேதி நடைபெறும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்யப்படுகிறது. அதன்பிறகு சசிகலா நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கிறார்.

அப்போது பல முக்கிய முடிவுகளை அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது. மாநாடு நடத்துவது குறித்தும் அப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலாவின் சுற்றுப்பயணத்தின்போது முக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களை சந்திக்கவும், ரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அப்போது தென்மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து