முக்கிய செய்திகள்

பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக்க திட்டம்? - புதிய தகவல்கள்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      அரசியல்
Anbumani-2021 11 24

Source: provided

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பா.ம.க.வுக்கு சட்டசபையில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.  அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற செயல்திட்டத்தை வகுத்து பா.ம.க. காய்களை நகர்த்த தொடங்கி உள்ளது.  அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் பேசும்போது, அடுத்த தேர்தலில் அன்புமணி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

எம்.பி.யாக இருக்கும் அன்புமணி கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இருக்கிறார். அன்புமணியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அதிலும் குறிப்பாக அன்புமணி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமித்து வருகிறார்கள்.  சமீபத்தில் கட்சியில் துணை பொதுச்செயலாளர் பதவி ஒழிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.  அதை தொடர்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் மெஜாரிட்டியான நிர்வாகிகள் அன்புமணியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். நியமனம் செய்யப்பட்டபோது அன்புமணி முதல்வராக வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  அதற்கு ஏற்றவாறு கட்சி தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் வாக்கெடுப்பு, நடத்தி முறைப்படி அன்புமணியை தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து