முக்கிய செய்திகள்

புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 22 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2021      உலகம்
Congo 2021 11 30

காங்கோவில் புலம்பெயர்ந்தோர் தங்கி இருந்த முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு என்ற பெயரிலும் காங்கோவில் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.  அதே போல், காங்கோவிற்கு அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டணி ஜனநாயக படைகள் என்ற பயங்கரவாத அமைப்பு இரு நாட்டிலும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.

உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டை சேர்ந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி புலம்பெயர்ந்து மனித உரிமைகள் அமைப்புகளாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மீதும் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் இடூரி மாகாணத்தில் இவோ என்ற நகரில் புலம்பெயர் மக்கள் பலர் முகாம்களில் தங்கி இருந்தனர். அந்த முகாம்கள் அமைந்துள்ள பகுதிக்குள் துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களுடன்  காங்கோவின் வளர்ச்சிக்கான கூட்டுறவு பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் வந்தனர்.  அந்த பயங்கரவாதிகள் முகாம்களில் தங்கி இருந்த புலம்பெயர் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதை தொடர்ந்து புலம்பெயர் மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து