முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒமைக்ரான் பரவிய நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் பொய்யான தகவல்களை கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு கடும் எச்சரிக்கை

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 'ஒமைக்ரான்' பரவிய நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் பொய்யான தகவல்களை கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உருமாறிய புதிய கொரோனா வைரசான ஒமைக்ரான், கடந்த ஒரு வார காலத்திற்குள் 17 நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது.  இதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை, விமான நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 14 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 14 நாடுகள் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம் மொரீஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகியவை உள்ளன. 

இந்த 14 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலைய வளாகத்திலேயே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், நெகட்டிவ் முடிவு வந்தாலும்கூட அதன்பின் அவர்கள் தங்களை அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 7-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்து, மேலும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை நீட்டிக்க வேண்டும் என சுகாதாரத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முதல் உடனே அமலுக்கு வந்தன. 

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி விமான நிலையங்களில் சோதனை நடத்தப்படுவதால் பயணிகள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நாடுகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இந்திய விமானநிலையங்களில் கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பயணிகள் பணம் கட்டி சோதனை செய்து, அதன் முடிவுக்காக கிட்டத்தட்ட 6 மணி நேரம் கூடுதலாக காத்திருக்க வேண்டியிருக்கும். விமான நிலையங்களில் மணிக்கு 400 முதல் 500 பேருக்கு சோதனை செய்ய முடியும் என்ற போதிலும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் நாளை (இன்று) ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவரும் 7 நாள் கண்காணிக்கப்படுகிறார்கள். கண்காணிப்பின்றி விமான பயணிகள் யாரும் வெளியே வர முடியாது.

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்த 138 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் பொய்யான தகவல்களை கொடுத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான, டேக்பாத் கிட்டுகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. 

மத்திய அரசின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் விமான நிலையங்களில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்து முடிவு வரும் வரை ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டு சூழல் ஏற்பட்டுள்ளது. 3,900 ரூபாய் கட்டணத்தில் ஆன்டிஜென் சோதனை எடுப்பவர்கள் முடிவு வர 3 மணி நேரமும், குறைந்த கட்டணத்தில் ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனை எடுப்பவர்கள் ஆறுமணி நேரம் வரையும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து