முக்கிய செய்திகள்

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு இறையன்பு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Iaiyapu 2021 09 12

சென்னை ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றுவதற்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து இன்றைக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக அளிக்க தலைமை செயலாளருக்கு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழக நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது.

கூடுதல் தலைமை செயலாளர்கள் சந்தீப் சக்சேனா, சிவதாஸ் மீனா, முதன்மை செயலாளர்கள் குமார் ஜெயந்த், பி.அமுதா, சுப்ரியா சாகு, ஹித்தேஷ் குமார் மக்வானா, சட்டத்துறை செயலாளர் (சட்ட விவகாரங்கள்) பி.கார்த்திகேயன் உள்பட அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் காணொலிக்காட்சி வழியாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளின் விவரங்கள், அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை, நீர்வளத்துறை வழங்கியுள்ள படிவங்களுடன் பூர்த்தி செய்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளருக்கு வருகிற 4-ம் தேதிக்குள் (இன்று) அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தினார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பற்றாளராகச் செயல்பட்டு கலெக்டர்களிடம் இருந்து அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்தில் 7-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாவட்ட கலெக்டர்கள் இதில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் இரவு பகலாக கணக்கெடுப்புகளை நடத்தி தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து