முக்கிய செய்திகள்

ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய சிறப்பு வார்டு : ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      தமிழகம்
Ministers 2021 12 06

Source: provided

சென்னை : அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுடன் கூடிய சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு நேரில் ஆய்வு செய்தனர்.

உருமாறி வரும் ஒமைக்ரான் வைரஸ் அண்டை மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வார்டுகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஏற்கனவே அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் 3-வது டவர் பிளாக்கில் 4-வது மாடியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 150 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையிலும் ஒமைக்ரான் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. 250 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் கொரோனா சிகிச்சைக்கு 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சை வார்டு மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து