முக்கிய செய்திகள்

தேசிய மருந்தியல் கல்வி நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டும்: மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 7 டிசம்பர் 2021      தமிழகம்
Rabindranath-MP 2021 12 07

தேசிய மருந்தியல் கல்வியியல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (NIPER) தமிழகத்தில் அமைக்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் மத்திய அரசிடம் கோரினார். 

தேனி தொகுதி எம்.பி.யான அவர் அதற்கான விவாதத்தில் கலந்து கொண்டார்.

இது குறித்து ப.ரவீந்திரநாத் எம்.பி, பேசியதாவது:

நான் சார்ந்த அ.தி.மு.க. கட்சியின் சார்பாக இந்த தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மசோதா 2021-க்கு எனது ஆதரவினை பதிவு செய்கிறேன்.

மருத்துவ தொழில்துறை 13 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன் 3 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி முக்கிய பங்காற்றுகிறது. கடந்த மாதம் உலகளாவிய மருத்துவ மாநாட்டை காணொலி மூலம் நம் பிரதமர் துவக்கி வைத்தார்.

அப்போது நமது பிரதமர் இந்திய சுகாதாரத் துறை பெற்ற உலகளாவிய நம்பிக்கை நம் நாட்டை உலகின் மருந்தகம் என்று அழைக்க வழி வகுத்தது என்றார். இந்த மசோதா நம் பிரதமரின் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

தற்போது உலகம் கோவிட்-19 ஆல் ஏற்பட்ட அசாதாரண நிலையை கடந்து வருகிறது. இச்சூழலில் சுகாதாரத்துறையில் புதுமையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதுபோன்ற தொற்று நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த உள்நாட்டில் தடுப்பூசிகளை தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் பாரம்பரிய மூலிகை மருந்துகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அரசால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா மருத்துவ துறையின் ஆராய்ச்சியை மேலும் முன்னேற்றும் என நம்புகிறேன். நாட்டின் சுகாதார அமைப்பில் கணிசமான பங்களிப்புடன் முக்கியமான மருந்துகள் மற்றும் ஜெனரிக் மருந்துகளின் தயாரிப்பில் முக்கிய உற்பத்தியாளர்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்

மேலும், மத்திய அரசு கடந்த 2009- ம் ஆண்டு NIPER எனும் தேசிய மருந்தியல் கல்வி நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைத்திட முன்மொழிந்தது. அதற்கு தமிழக அரசும் கோயில் நகரமான மதுரையில் 116 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.

இந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1100 கோடி ரூபாய் திட்டம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இத்திட்டம் அரசாங்கத்திடம் இன்னமும் நிலுவையில் உள்ளது.

எனவே நான் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூடுதலாக அமையவுள்ள 6 NIPER-களில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து