முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும். அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. 

கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது.  இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த நகரமயமாக்கம்’ தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன.  அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு.  தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே  நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.

சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது.  தண் பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.  பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022-ம் ஆண்டில் கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.  

8-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொந்தகை, அகரம், மணலூர்), மூன்றாம் கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, 2-ம் கட்டமாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, முதல்கட்டமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி மற்றும் தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன. 

அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு,செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து