முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 வருடமாக செய்யாத திட்டங்களை 10 மாதத்தில் முடித்தது தி.மு.க. ஆட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2022      தமிழகம்
Stalin 2021 10 25

Source: provided

விழுப்புரம் : தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்றும் 10 வருடமாக செய்யாத திட்டங்களை 10 மாதங்களில் தி.மு.க. ஆட்சி செய்து முடித்து விட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கியும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த 10 மாத கால  தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று சில தாய்மார்களிடத்திலே நான் கேட்ட போது,  ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று தாய்மார்கள் சொன்னார்கள். 

எந்தவிதப் பாகுபாடின்றி, எந்தவித வேறுபாடின்றி இந்தச் சமூகம் வாழவேண்டும் என்பதற்காகத்தான் குடியிருப்புகளாக நம்முடைய ஊர்கள் மாற வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார். ஒரு குறிப்பிட்ட சாதியினர், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வாழ்வார்கள் என்ற நிலை இல்லாமல், அனைவரும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும், ஒற்றுமையோடு, ஒருமித்தக் கருத்தோடு அவர்கள் வாழ வேண்டும் என்று பெரியார் விரும்பினார். அந்த விருப்பத்தின் அடையாளம் தான் சமத்துவபுரங்களை கருணாநிதி  உருவாக்கினார். ஏதோ, ஒரு இடத்தில் சும்மா ஒரு அடையாளத்திற்காக நாம் கட்டவில்லை. 2010-2011 ஆம் ஆண்டிலே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டம் இது. பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில்  சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  உயர்ந்த நோக்கத்துடன் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அதனால்தான், அனைத்து சமத்துவபுரங்களும் எங்கேயாவது பழுது இருந்தால் அது மக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலைக்கு போய்விடக் கூடாது என்பதற்காகத் தான் அது உடனடியாக சீரமைக்கப்படும் என்று 24-06-2021 அன்று சட்டமன்றத்தில் நான் தெரிவித்தேன். 

அந்த அடிப்படையில் தான் 1997 முதல் 2010 வரை கட்டப்பட்ட சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாயில் சீரமைக்க இந்த அரசு  உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  கூடிய விரைவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சமத்துவபுரங்கள் புதுப்பொலிவைப்  பெறும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், அதுதான் எங்களுடைய லட்சியம். 

சமத்துவபுரத்தைப் போல 2011-ம் ஆண்டுக்குப்  பிறகு கைவிடப்பட்ட மற்றொரு முக்கியமான திட்டம் இருக்கிறது என்று சொன்னால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். இத்திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு நூலகம் அமைத்தோம். அறிவுசார்ந்த இளைய சமுதாயம் உருவாக வழிவகை செய்தோம்.  கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மீண்டும் புதுப்பொலிவு பெறுவது மூலமாக தமிழகக் கிராமங்கள் மிகச் சிறந்த வளர்ச்சியை நிச்சயமாக அடையும். இதேபோல் நமக்கு நாமே திட்டத்தையும் கடந்த பத்து வருடமாக முடக்கி போட்டு வைத்திருந்தார்கள்.  அந்தத் திட்டமும் இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.  பத்தாண்டுகாலம் செய்து தர வேண்டிய திட்டங்களை, பத்து வருடமாக செய்யாத திட்டங்களை, பத்தே மாதத்தில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் நம் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார். 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து