முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் எந்தவித தொழிற்சாலைகளையும் தமிழக அரசு அனுமதிக்காது வேளாண் மண்டல கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்ட அரங்கில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா என்பது இப்போது மட்டுமல்ல, நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே வரலாற்றுச் சிறப்பு மிகுந்த ஒரு பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  காவிரி டெல்டா என்பது மிகவும் செழிப்பான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் முழுப்பகுதியையும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் உள்ளடக்கியது. காவிரி நதியின் மூலம் பாசனம் கிடைக்கப் பெறுவதால், இப்பகுதிகளில் நெல் ஒரு முக்கியமான பயிராக கிட்டத்தட்ட 14 லட்சம் ஏக்கர் பரப்பிலே சாகுபடி செய்யப்பட்டு, மாநிலத்தின் ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் 34 சதவீதம் அரிசி உற்பத்தியினை இந்தக் காவிரி டெல்டா பகுதி அளித்து வருகிறது.

தென்னை, கரும்பு, வாழை, மக்காச்சோளம், பயறு வகைகள், எள், பருத்தி போன்ற பயிர்களும், டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், இந்த பகுதி மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காணப்படுகிறது. இந்தப் பகுதியைச் சார்ந்த உழவர் பெருமக்கள் மட்டுமல்லாமல், வேளாண் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண் தொழிலைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறார்கள். வேளாண்மை, உணவு உற்பத்தி பகுதியாக இது இருந்தாலும், இன்னொரு பக்கத்திலே பல்வேறு நெருக்கடிகளுக்குரிய பகுதியாகவும் இது இருக்கிறது. இப்பகுதிகளில், வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பெரும் இடர்பாடுகளை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வாழும் உழவர்கள், வேளாண் தொழிலாளர்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதியில் விளை நிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களை மேம்படுத்தவும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பும் முதலமைச்சரை தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

உழவர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அரசுதான் நம்முடைய தி.மு.க. அரசு. இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம் ஆகியவற்றையும் அறிவித்திருக்கிறோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எந்தவித தொழிற்சாலைகளையும் இந்த அரசு அனுமதிக்காது.  வேளாண்மைத் தொழிலை நம்பி இருக்கக்கூடிய உழவர்கள் மற்றும் வேளாண் தொழிலின் நலனைப் பாதுகாக்கவும், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த அரசு முனைப்போடு செயல்படும்.  பாசன நீரைப் பொறுத்தமட்டில், கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறுவதற்கு இந்த அரசு சட்டரீதியான, அரசியல் ரீதியான எல்லா ஏற்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும். பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அதற்காக அரசு மேற்கொள்ளக்கூடிய முன்னெடுப்புகளுக்கு நீங்களெல்லாம் ஒத்துழைப்பு வழங்கி, துணை நிற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து