முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடுதல்: அசத்தும் இந்தியா

புதன்கிழமை, 18 மே 2022      விளையாட்டு
Beautiful-India-2022-05-18

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிச்சுற்றில் இந்திய அணி 16-2 என்ற புள்ளிகள் கணக்கில் ஜொ்மனியின் மைக்கேலா போசெல், வெனெசா சீகா், மியா ஃபுக்ஸ் கூட்டணியை வீழ்த்தியது. 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் பங்கஜ் முகேஜா, சிஃப்ட் கௌா் சா்மா கூட்டணி 12-16 என போலந்து அணியின் மைக்கேல் சோஜ்னோவ்ஸ்கி, ஜூலியா பியோட்ரோவ்ஸ்கா இணையிடம் வீழ்ந்து வெள்ளியை வசப்படுத்தியது.

தற்போதைய நிலையில் இந்தப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 11 தங்கம், 13 வெள்ளி, 4 வெண்கலம் என 28 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இதே இடத்துடனேயே போட்டியை நிறைவு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும், பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருக்கும் இத்தாலி, ஷாட்கன் போட்டியில் அசத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதால், அந்த அணியும் முதலிடத்துக்கு மையமிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்

டெஸ்ட், வெள்ளைப் பந்து கிரிக்கெட் என இரண்டு தனித்தனி பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய முடிவெடுத்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். நியூசி. முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய பயிற்சியாளரை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 48 வயது மேத்யூ மாட், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கான பயிற்சியாளராக நான்கு வருடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தன் பணியை அவர் தொடங்குவார். மேத்யூ மாட், 66 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2015 முதல் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பயிற்சியாளராக மேத்யூ மாட் பணியாற்றியுள்ளார். ஏழு வருடக் காலத்தில் ஆஸ்திரேலிய அணி இருமுறை டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. 

சென்னையை கடைசி இடத்துக்கு தள்ள மும்பை அணிக்கு வாய்ப்பு

ஐபிஎல் போட்டி லீக் சுற்றின் முடிவில் மும்பையும் சிஎஸ்கேவும் இதுவரை கடைசி இடத்தைப் பிடித்ததே இல்லை. ஆனால் இம்முறை இரு அணிகளில் ஒன்று எப்படியும் அந்த நிலையை எதிர்கொண்டே ஆகவேண்டும். இந்த ஆண்டு தொடர்ந்து கடைசி இடத்தில் இருக்கும் மும்பை  அணியால் கடைசி இடத்தைத் தவிர்க்க முடியுமா? வாய்ப்புள்ளது. * சிஎஸ்கேவுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 50 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெல்லவேண்டும். அல்லது ராஜஸ்தான் அணி இலக்கை 14-15 ஓவர்களில் விரட்ட வேண்டும்.

மும்பைக்கு அப்படியே தலைகீழ். 50 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தில்லியை வெல்லவேண்டும். அல்லது மும்பை அணி இலக்கை 14-15 ஓவர்களில் விரட்ட வேண்டும். இந்த இரண்டில் எது நடக்காமல் போனாலும் மும்பை அணிக்குக் கடைசி இடம் தான். 

வேகப் பந்து வீச்சில் பும்ரா புதிய சாதனை..! 

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். அதன்படி, அஷ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20-யில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் , மும்பை வேகப்பந்த வீரர்பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார்.  இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.   அவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2-வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!