முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8-வது முறையாக பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு : துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      இந்தியா
Nitish-Kumar 2022-08-10

Source: provided

பாட்னா : பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பீகார் முதல்வராக அவர் பதவியேற்பது இது 8-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமாரைத் தொடர்ந்து மாநிலத்தின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான பதவியேற்பு விழாவில் பாஜகவினர் கலந்து கொள்ளவில்லை. பீகார் சட்டப்பேரவையில் 77 எம்எல்ஏக்களுடன் இரண்டாவது பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கிறது பா.ஜ.க.. இந்நிலையில், நேற்றைய பதவியேற்பு விழாவினை அவர்கள் புறக்கணித்தனர். ஆனால் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “எங்களுக்கு முறைப்படி அழைப்புவிடுக்கப்படவில்லை. அதனால், பதவியேற்பு விழாவிற்குச் செல்லவில்லை” என்றார். மேலும், “நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்றும் அவர் கூறினார்.

முதல்வர் பதவியேற்ற பின்னர் பேசிய நிதிஷ்குமார், "2020 தேர்தலுக்குப் பின்னர் நான் முதல்வராக விரும்பவில்லை. கட்சியினர் கொடுத்த அழுத்தத்தாலேயே முதல்வரானேன். ஆனால், கட்சியினர் முந்தைய கூட்டணியில் என்ன மாதிரியாக ஒடுக்கப்பட்டனர் என்பதை நீங்களே பார்த்தீர்கள். நான் உங்கள் அனைவரிடமும் கடந்த இரண்டு மாதங்களாகவே பேசவில்லை. 2015-ல் நாம் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றோம் என்று நினைத்து பாருங்கள். ஆனால் இப்போது நாம் எந்த எண்ணிக்கையில் இருக்கிறோம் என்று பாருங்கள்" என்றார். எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் மற்றும் பாஜகவின் அரசியல் வியூகத்தை சாடிப் பேசினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தான் அவாம் கட்சி 4, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றின. தேர்தலுக்கு பிறகு விகாஸ் ஷீல் இன்சான் கட்சியின் 3 எம்எல்ஏ.,க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த கட்சியின் பலம் 77 ஆக உயர்ந்தது.

எதிரணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர். ஒரு தொகுதி இடைத்தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் பலம் 80 ஆக உயர்ந்தது.

ஜே.டி.யு. பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில், நேற்று அவர் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

பீகார் சட்டசபையின் பலம்:

1) ராஷ்டிரிய ஜனதாதளம் - 79.

2) பா.ஜ.க. - 77.

3) ஐக்கிய ஜனதாதளம் - 45.

4) இந்திய கம்யூ. எம்.எல்.- 12.

5) மார்க்சிஸ்ட் கம்யூ. - 2.

6) இந்திய கம்யூ. - 2.

7) இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா- 4.

8) காங்கிரஸ் - 19.

9) ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி - 1.

10) சுயேச்சை - 1

11) மொத்த பலம் - 242.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து