முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் நாளை 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு: தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிப்பு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      இந்தியா
Delhi 2022-08-13

75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

75 ஆண்டுகள்... 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவையொட்டி இதுவரை இல்லாத வகையில் டெல்லி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பயங்கரவாதிகள் சதி... 

செங்கோட்டை மற்றும் விழா நடைபெறும் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செயல்களில் ஈடுபடலாம் என்று அச்சுறுத்தல் நிலவுவதால் டெல்லி மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டெல்லி நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.

போலீசார் சோதனை... 

டெல்லியில் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள்,வணிக வளாகங்கள், முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன. தங்கும் விடுதிகளில் நாசவேலை கும்பல் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய வீதிகளில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சாதாரண உடைகளிலும் போலீசார் நகர் முழுவதும் சுற்றி வருகிறார்கள்.

உஷார் நிலையில்....

சுதந்திர தினம் முடியும் வரை பட்டங்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி இந்திய எல்லை பகுதியும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது டிரோன்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் பறந்து வருகிறது. இதனை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எல்லையில் ராணுவ வீரர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

மத்திய அரசு எச்சரிக்கை...

சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு பணியில்...

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்து உள்ளார்.

தீவிர வாகன சோதனை...

இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள், கோவில்களை சுற்றி உள்ள இடங்கள் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

16-ந்தேதி வரை... 

இந்த சோதனையின் போது சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தேக நபர்களின் முகவரிகளை வாங்கி அவர்கள் பற்றிய முழு தகவல்களையும் போலீசார் திரட்டி விசாரித்து வருகிறார்கள். சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் 24 மணி நேரமும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு பணிகளை வருகிற 16-ந்தேதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

20 ஆயிரம் போலீஸ்...

சென்னையில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும், ராஜாஜி சாலையை போலீசார் கடந்த 6-ந்தேதி முதல் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னையில் கடந்த 3 நாட்களாக போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர வாகனச் சோதனையும் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

7 அடுக்கு பாதுகாப்பு... 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி வரை நீடிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் உள்ளிட்ட திரவ பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பல கட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

5 அடுக்கு பாதுகாப்பு... 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவதையொட்டி அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் அங்கு போலீஸ் கண்காணிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரவு பகலாக வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உடனடி நடவடிக்கை...

சுதந்திர தினத்தையொட்டி, வன்முறையை தூண்டும் வகையிலும், மதம் மற்றும் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையிலும் பதியப்படும் கருத்துகளை தடுக்கும் வகையில் சைபர் குற்றப்பிரிவினரும், உளவுத்துறையினரும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். இதில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து