முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி, பிரதமர் மோடியை சந்திக்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் : தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி கோருகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : சென்னையில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.  நாளை மறுதினம் 17-ம் தேதியன்று, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவையும், 14-வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கரையும் முதல்வர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம்  தேதி முதல் இந்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இந்த சூழலில் நாளை 16-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு நேரில் நன்றி தெரிவிப்பதுடன், தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்து கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு கொடுத்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். 

மேலும் தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,  தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் ஆகியோரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத் திட்டம் விரிவாக தயார் செய்யப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து