முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகரெட் பயன்பாட்டை குறைக்க அன்புமணி யோசனை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Anbumani 2022 09 23

Source: provided

சென்னை : ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ. 22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று அன்புமணி  கூறியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

இந்தியாவில் 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66 சதவீத உயிரிழப்புகள் இதயநோய், நுரையீரல் சார்ந்த சுவாச நோய்கள், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நிகழ்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவாச நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலகில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

ஆண்களை வாய்ப் புற்றுநோய், குரல்வளை புற்றுநோய் ஆகியவைதான் அதிகம் தாக்குகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை அதிகம் ஏற்படுகின்றன.

பொதுவாக புற்றுநோய் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக திகழ்வது புகையிலை பொருட்களின் பயன்பாடு தான். அதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் இப்போது ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ. 22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும். அதே போல், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகம்  உள்ளிட்ட எந்த அரசும் முறையாக செயல்படுத்தவில்லை.

பெண்கள், குழந்தைகளுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகை பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆகவே இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து