முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மக்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேசிய தன்னார்வ ரத்த தான நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 

ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. 

தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம். ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. 

பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம்  முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழகம் 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து