முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் வன்முறை உயிரிழந்தோர் எண்ணிக்கை 174-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      உலகம்
Indonesia 2022-10-02

Source: provided

ஜகார்தா ; இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174- ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ளூர் கால்பந்து போட்டி அங்குள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் அரேமா எப்.சி- பெர்செபயா சுரபயா அணிகள் மோதின. இதில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. அந்த அணி சொந்த மண்ணில் தோற்றதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

ஆயிரக்கணக்கானோர் தடுப்புகளை மீறி மைதானத்துக்குள் புகுந்தனர். அரேமா அணி வீரர்களை தாக்கினர். மைதானத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்த வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். சில வாகனங்களுக்கு தீயும் வைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி அளித்தது. 

இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வன்முறை, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் வன்முறையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் 129 பேர் பலியானார்கள். 180-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மேலும் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக இந்தோனேசியா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், மைதானத்தில் அரேமா அணியின் ஆதரவாளர்கள் செயல்களுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும், அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். போட்டிக்கு பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க ஒரு குழு மலாங்குக்கு சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. வன்முறையை அடுத்து கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் அரேமா அணி எஞ்சிய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து